google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html ஏழு காளை ~ bulls$treet

Ads Inside Post


ஏழு காளை




மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும், அங்கு சாமி மாடு ஒன்றை முதலாவாக அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. ஆனால் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
யார் இந்த அழகாத்தேவன்?
மதுரை மாவட்டம் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்த செல்வந்தர் கருத்தமாயனின் கடைக்குட்டி மகன். அழகாத்தேவன், புஜபல பராக்கிரமன். ஆனால் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் நாடோடி.
அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார். அப்போது நாகமலைக்கு அருகே கீழக்குயில்குடியில் கருத்தமலை மகள் ஒய்யம்மாள் குறித்து விவரம் கிடைத்தது. செல்வாக்குக்கு சமம் இல்லை எனினும் கருத்தமாயன், கருத்தமலை வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி.
ஒய்யம்மாளுக்கு அழகாத்தேவனை பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள். அழகாத்தேவனும் சவாலை ஏற்கிறான்.



வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான்.
கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமை, ஒய்யம்மா சகோதரர்களுக்கு.



எனவே அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றி கொலை செய்து விடுகிறார்கள்!!
இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரிய வர, அவள் தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்து கொள்கிறாள்!!
மதுரை மாவட்டம் செக்கணூரணி அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் அழகாத்தேவன் நினைவாக, பொதுமக்கள் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
கீழக்குயில்குடிவாசிகளிடம் சொரிக்காம் பட்டிக்காரர்கள் மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ வைத்துக் கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாக தொடர்கிறது.
நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டு உள்ளன..


Previous
Next Post »